Friday, December 31, 2010

மலையக இலக்கியத்தில் புதிய போக்கை காட்டி நிற்கும் குடை நிழல் என்ற நாவல்- லெனின் மதிவானம்

மலையக இலக்கியத்தில் தனித்துவமான ஆளுமை சுவடுகளைப் பதித்தவர் தெளிவத்தை ஜோசப். அவர் சிறுகதையாசிரியர், நாவலாசிரியர், விமர்சகர் என பல்துறைச் சார்ந்த பங்களிப்பினை மலையக இலக்கியத்திற்கு வழங்கியவர். இன்று இருக்க கூடிய மலையக எழுத்தாளர்களுள் தெளிவத்தை ஜோசப் அவர்களை சிரேஷ்டராய்க் கருதி கொள்ளும் மரபு இயல்பாகவே தோன்றியுள்ளது.
ஈழத்து எழுத்தாளர் மத்தியில் தெளிவத்தை ஜோசப் என்ற பெயருக்கு தனி மதிப்புண்டு. அப்பெயரானது ஒருவருக்கு பரிவு, பாசம், பயம், மதிப்பு முதலியவற்றை தோற்றுவிக்கும் கனிவுள்ள இடத்தில் தான் கண்டிப்பும் இருக்கும் என்பதற்கமைய இயல்பாகவே எளிமையாகவும் இனிமையாகவும் பேசி பழகும் தெளிவத்தை ஜோசப் ஆழமான கனதியான விசயங்களை கூறும் போதும், அநீதிகளை எதிர்க்கும் போதும் ஆவேசத்துடன் பேசி தனது கருத்துக்களை நிறுவார். இத்தகைய பண்பினை அவரது படைப்புகளிலும் காணலாம்.
அண்மைக் காலத்தில் மலையக இலக்கியத்தில் ஏற்பட்ட புதியதொரு போக்குதான் அதன் தனித்துவம் பிரதேச மண்வாசனை, சமகால வாழ்க்கை பிரச்சனை என்பவற்றினை வலியுறுத்துகின்ற அதே சமயம் அது தமிழ் இலக்கியத்தின் பொதுமையையும் வலியுறுத்தி நிற்கின்றது.
தென்னாபிரிக்காவில் தோற்ற விடுதலையுணர்வு மிக்க இலக்கியங்களும் இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தில் முகிழ்ந்த பாரதியின் படைப்புகளும் அவ்வவ்வக் காலச் சூழலை பிரதிப்பலித்து நின்ற அதே சமயம், அவை ஏனைய ஒடுக்கப்படும் மக்களின் உணர்வுகளை பிரதிப்பலித்து நிற்பதனைக் காணலாம். இதனை தான் மார்க்ஸ் “பல தல இலக்கியங்களிலிருந்தும் தேசிய இலக்கியங்களிலிருந்தும் ஒரு உலக இலக்கியம் உதயமாகின்றது” என்றார்.
இந்த அடிப்படையில் நோக்குகின்ற போது மலையக படைப்பாளிகள் இன்று ஈழத்துப் படைப்பாளிகளாக பார்க்கின்ற நிலை தோன்றி வளர்ந்துள்ளது. இந்த பின்னணியில் தான் தெளிவத்தை ஜோசப் இன்று ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மிக முக்கியமான படைப்பாளியாக கொள்ளப்படுகின்றார். மலையக இலக்கியத்தின் ஆழ அகலப்பாட்டை நுண்ணயத்துடன் நோக்குபவர்களால் இந்த புதிய மாற்றங்களையும் போக்குகளையும் உணர்ந்துக் கொள்ள முடியும்.
இந்த பின்னனியில் நின்றுக் கொண்டே தெளிவத்தை ஜோசப்பின் படைப்புகளை மதிப்பீடு செய்ய வேண்டியுள்ளது. இக் கட்டுரையும் அவரது ”குடை நிழல்” என்ற நாவல் குறித்த அறிமுகத்தினை வழங்க முற்படுகின்றது.
மலையகத் தமிழர்கள் பல்வேறுபட்ட தடைகளுக்கும் தர்மயுத்தத்திற்கம் பின்னர் தம்மை தேசிய சிறுபான்மைக்கான அடையாளத்துடன் இனக்குழுமமாக வளர்த்த போது தொழில் நிமிர்த்தம் கொழும்புக்கு புலம்பெயர தொடங்கினர். அவர்கள் கொழும்பை தொழிலுக்கான இடமாகவும் மலையகத்தை வாழ்விடமாகவும் கொண்டிருந்தனர். ஆரம்பத்தில் சாதாரண கூலி வேலை, வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றவர்களாக காணப்பட்டனர். காலப்போக்கில் ஏற்பட்ட சமூக பெயர்ச்சியின் காரணமாக பல தொழில்களில் ஈடுபடக் கூடிய மத்தியதர வர்க்கமொன்று கொழும்பில் தொழில் நிமிர்த்தம் வசிக்கின்றவர்களானார்கள்.
இ;த்தகைய சூழலில் இலங்கையில் ஏற்பட்ட இனமுரண்பாடுகள் அதனையொட்டி எழுந்த இனவிடுதலை போராட்டங்கள் - கைதுகள், தனிமனித பழிவாங்கள்கள் மலையகத் தமிழரையும் பாதிக்க தொடங்கியது. குறிப்பாக கொழும்பை வாழ்விடமாகவும் தொழிலிடமாகவும் கொண்டவர்கள் பல்வேறுபட்ட நெருக்கடிகளுக்கு உட்பட்டனர். இந்த சூழலில் மலையகத் தமிழர்கள் அனுபவித்த இன்னல்களை இந்நாவலின் பிரதான பாத்திரம் மூலமாக வெளிப்படுத்தப்படுகின்றன. இதுவரை வெளிவந்த படைப்புகளில் இந்நாவலே இந்த நிலைமையை ஓரளவு எடுத்துக் காட்டுகின்றது எனலாம்.
அத்தியாயம் 5 இல் மலையக வாழ்க்கை எடுத்துக் கூறப்படுகின்றது. பெரியாங்கங்கானி காலத்தில் மலையகத்தில் காணப்பட்ட நிலைமைகள் சுரண்டல், ஒடுக்கு முறை என்பன வெளிக் கொணரப்படுகின்றது. யாவற்றுக்கும் மேலாக ஆண்களின் ரோமம் அடர்ந்த கரங்களின் ஆதிக்கத்தை, பெண்களின் நிலையை பெரியாங்கங்கானியின் மனைவி, அவரது வப்பாட்டிகள் மூலமாக ஆசிரியர் எடுத்துக் காட்டத் தவறவில்லை. ஒரு புறத்தில் பெரியாங்கங்காணி வாழ்க்கை முறையை அழகுப்படுத்திக் காட்டியிருப்பினும் அதன் சிதைவும்; வெளிக் கொணரப்பட்டுள்ளது.
மலையக வாழ்வில் தாக்கம் செலுத்துகின்ற பிறிதொரு போக்கு தான் யாழ்ப்பான மேட்டுக் குடித் தளத்தின் அதிகார மனோபாவமாகும். இலங்கைத் தமிழர்களில் யாழ்ப்பாணத்தவர்களே மேலானவர்கள் எனவும் அவர்களே கல்வி அறிவு மிக்கவர்கள் என்றவகையிலான சிந்தனைப் போக்கு இன்றுவரை இருந்து வருகின்றது. மலையகத்தின் அபிவிருத்தி குன்றிய நிலை- கல்வியில் போதிய வளர்ச்சியின்னை இந்த சிந்தனையை வலுப்படுத்தியுள்ளது. மலையகத்தில் தோன்றிய புதிய மத்தியதர வர்க்கமும்(குறிப்பாக எண்பதுகளில்) யாழ்ப்பானத் தமிழர்களாக பாவனை செய்தல், அவர்களின் மொழி நடையை கையாள்தல், படித்த இளைஞர்கள் யாழ்ப்பான பெண்களை திருமணம் செய்தல் மதலிய அம்சங்களினூடாக தமக்கான அங்கிகாரத்தை வேண்டி நிற்கின்ற போக்கு (இயல்பான காதல் திருமணம் என்பது வேறு) இச்சமூகமைப்பில் வளர்ந்திருந்தது. இந்நாவலில் வருகின்ற சட்டத்தரணியின் போலி வாழ்க்கை குறித்தும், அதனால் ஏற்படுகின்ற கருத்தோட்டங்கள் குறித்தும் எடுத்துக் காட்டுவதில் இந்நாவல் ஆசிரியர் வெற்றிப் பெறுகின்றார். இதனை யாழ்ப்பாண வெறுப்புணர்வுகள் படைப்பாக்காது அதனை இயல்பான சமூக சிதைவின் பின்னனியில் சித்தரித்துக் காட்ட முனைவது இந்த நாவலின் தனித்துவமான அம்சமாகும். தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வளர்ந்து தமது கல்வி மேம்பாட்டின் மூலமாக மத்திய தர வர்க்கமாக மாறியவர்கள் கிளாக்கர், கணக்கப்பிள்ளை போன்றோரின் பிள்ளைகளை திருமணம் செய்து அதனூடாக தமது வாழ்க்கைப் போக்குகளை மாற்றிக் கொண்டவர்கள் பற்றியே மலையகத்தில் அனேக படைப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் யாழ்பாண மேட்டிமைத்தனதிதிற்கு தமது தனமான உணர்ச்சிகளை அடமானம் வைத்து மானுடம் இழந்து அம்மணமாக நின்றவர்கள் குறித்துக் காட்டியதில் இந்நாவலுக்கு முக்கிய இடமுண்டு. இந்நாவலில் கருத்து முழக்கங்களையோ உணர்ச்சிமயமான சன்னதங்களையோ காணமுடியாதுள்ளது. கருத்து நிலை கோட்பாடாக விபரிக்கப்படாமல் மனிதவுறவுகளின் அடிப்படையில் அவற்றினைப் படைப்பாக்க முனைந்துள்ளமை இந்நாவலின் வெற்றிக்கு வழிவகுக்கின்றது. காலவோட்டத்தில் இடையீடின்றி மாறிக் கொண்டிருக்கும் வாழ்நிலைகளின் இயக்கத்திசைகளை நுணுக்கமாக நோக்குவதற்கு இந்நாவல் துணை நிற்கின்றது.
இந்நாவலில் மலையக மண்வாசனை மிக்க மொழிநடை கையாளப்பட்டாலும் அது இடம், பொருள், காலம், வர்க்க, தொழில் நிலைகளுக்கேற்ப அமைந்திருப்பதைக் காணலாம். எடுத்துக் காட்டாக பெரியங்கங்கானி தமக்கு வீட்டு வேலைகளை செய்கின்ற கிருஷ்ணாவிடம் உரையாடுகின்ற பாங்கு, மொழிநடை நாவலின் கதாநாயகன் தமது சட்டத்தரணி நண்பன், மற்றும் பொலிஸ்காரர்களிடம் உரையாடுகின்ற மொழிநடையும் வித்தியாசப்படுகின்றது. இவ்வாறு நாவல் முழுவதிலும் தேவைக்கேற்ற வகையில் மொழி நடை கையாளப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
இந்நாவலினை தொகுத்து நோக்குகின்ற போது, நாவலின் இறுதி இப்படியாக வரிகள் அமைந்துக் காணப்படுகின்றன.
குடை நிழல் இருந்து குஞ்சரம் ஊரும் இவர்களுக்கு நடை மெலிந்து நலிவுறும் எங்கள் நிலை எங்கே தெரியப் போகிறது. அதனால்தான் சொல்கின்றோம் குடையைப் பிடுங்க வேண்டும் என்று
~குடையை மட்டுமல்ல குஞ்சரத்தையும் சேர்த்து
என்கிறது மனம்”
“குடையை மட்டுமல்ல குஞ்சரத்தையும் சேர்த்து” என்ற வரிகள் புதியதோர் அரசியல் மாற்றத்திற்கான தேவையை உணர்த்துகின்றது. இக் கூற்று சோகத்தை இசைத்தாலும் அவைக்கூட சமூக அசைவியக்கத்தை முன்னெடுத்து செல்வதாகவே அமைந்திருக்கின்றது.
இத்தகைய சிறப்புகளை கொண்டிருக்கின்ற இந்நாவலில் மலையகத் தமிழர்களை இந்திய வம்சாவழித்தமிழர் என்ற பதம் கொண்டு அழைக்க முற்படுகின்றார் தெளிவத்தை ஜோசப.; மலையகத் தமிழரின் வரலாறு இருப்பு, அவர் தம் நடாத்திய போராட்டங்கள் யாவற்றையும் சிதைக்கும் வகையில் தான் இந்திய தமிழர்கள் என்ற அடையாளம் பாவிக்கப்படுகின்றது. ஆயிரம் கணக்கான தொழிலாளர்களின் நலனில் பின்னனியில் உருவாகியிருக்கின்ற மலையகத்தமிழர் என்ற அடையாளத்தை மறுத்து இந்திய தமிழர் என்ற அடையாளம் பிரயோகிக்கப்படுவது எமது வரலாற்றை பின்னோக்கித் தள்ளுவதாக மட்டுமன்று இந்திய ஆதிக்க சக்திகளின் கைக்கூலியாக எம்மை ஆக்கிக் கொள்ள கூடிய நிலையையும் உருவாக்கும்.
எமது யாசிப்பு இது போன்ற காத்திரமான படைப்புகளை மேலும் தெளிவத்தை ஜோசப் வெளிக்கொணர வேண்டும் என்பதாகும்.

No comments:

Post a Comment